இலங்கையில் இஸ்லாமிய எழுச்சி - அல்லாஹ்வின் இல்லத்தை தகர்க்க வந்தவர் ஒப்புதல்


நிரஞ்சலா ஆரியவன்ச  

ரங்கிரி தம்புள்ள விகாரையின் பிரதம மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரோ அண்மையில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற பள்ளிவாயல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டவர். குறித்த பள்ளிவாயல் விகாரையின் புனித பிரதேசத்தில் உள்ளடங்குவதாக கூறி அதை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்படும் கருத்தை முஸ்லிம்கள் நிராகரித்துள்ளனர்.

பற்றியெரியும் இந்த பிரச்சினை இன்னும் அரசினால் தீர்க்கப்படவில்லை.

குறித்த தேரர் இவ்வாறான சர்ச்சைக்கு ஒன்றும் புதியவரல்ல, இதற்கு முன்னரும் நிர்வாக மற்றும் அரசியல் கட்டமைப்புகளுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

பேட்டியின் முடிவின்போது நிருபர் நிரஞ்சலா ஆரியவன்சவை தம்புள்ள பிரதேசத்துக்குள் இனி எப்போதாவது அவர் காலடி எடுத்து வைக்கும் பட்சத்தில் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று  தேரர் எச்சரித்துள்ளார்.

பேட்டியின் வரிவடிவம் பின்வருமாறு

கே: தம்புள்ள கந்தலம ஹோட்டல் நிர்மாணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மூலமே நீங்கள் அறிமுகமானீர்கள். அவ்வார்ப்பாட்டத்தின் இறுதி முடிவு என்னவாக அமைந்தது.

ப: நான் உயிர் வாழும் வரை ஆர்ப்பாட்டங்களை நடாத்துவேன் இதுதான் எனது நிலைப்பாடு. இவ்வார்ப்பாட்டத்தில் நான் ஒரு சாதாரண நபராக கலந்து கொள்ளவில்லை. கந்தலம இடது கால்வாய் விவசாயிகள் அமைப்பின் தலைவராகவே கலந்து கொண்டேன். எனினும் இதை ஊடகங்கள் நான் சங்க சபாவின் பொது செயலாளராக கலந்து கொள்வதாக திரிபு படுத்தியிருந்தன.

ஒரு விவசாய சமூக தலைவராக, ஒரு மதகுருவாக கந்தலமவின் சூழல் முக்கியத்துவத்தை நான் நன்கு உணர்ந்திருந்தேன். குலங்களின் கரைகளில் கட்டடங்கள் எழுப்புவது சட்டவிரோதமானது. இந்த வழமை புராதன அரசர்களின் காலம் முதல் காலனித்துவ ஆட்சிவரை பின்பற்றப்பட்டது.

மக்களால் தெரிவு செய்யப்பட ஒரு ஜனநாயக அரசும் இந்த வழமைக்கு மதிப்பளிக்கும் என்று எதிர்பார்த்தோம்.  பிழையான இந்த கட்டுமான நிர்மாணிப்புக்கு எதிராக மக்களை விழிப்பூட்டி இத்திட்டத்தை நிறுத்த எண்ணினோம். அரசு எவ்வாறு நடந்து கொண்டது? பொது மக்கள் அபிப்பிராயத்தை மதிக்காமல் போலீஸ் பாதுகாப்புடன் திட்டத்தை முன்னெடுத்தது. இந்த நிலை எமது ஆளும் ஜனநாயக அரசுகளின் நிலைப்பாட்டை 1991 யிலேயே எனக்கு உணர்த்தியது. மக்களாட்சி என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சி முறையே தொன்று தொட்டு நடந்து வருகின்றது.

கே: அந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கியமைக்காக வருத்தப்பட்டீர்களா?

ப: ஒரு அரசினால் எதை செய்ய முடியாது? ஜனாதிபதி பிரேமதாச சகல வித அதிகாரங்களையும் கொண்டிருந்தார். அவரின் அதிகாரத்துக்கு ஒரு ஹோட்டலை நிர்மாணிப்பது மிக சாதாரணமான விடயம். இந்த நிர்மாணிப்பு பிரேமதாசவின் அங்கீகாரத்துடன் இடம்பெற்றது. இது ஒரு அரசாங்கத்தினால் எதனையும் செய்ய முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது.

கே: நீங்கள் மீண்டும் இப்போது ஒரு பள்ளிவாயல் கட்டடத்தை, அதன் இருப்பை தம்புள்ள விகாரை எல்லைக்குள் அமைந்திருப்பதாக கூறி அதை அகற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். எதிர்காலத்தில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்தும் நீங்கள்  பின்வாங்குவீர்களா?
ப: இல்லை, நாங்கள் ஒரு தடவை பாடம் படித்துவிட்டோம். இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்து விட்டோம். யாரும் ஜனநாயகத்துக்கு எதிராக அடக்குமுறையாக ஆட்சி புரியும் பட்சத்தில் உயிரை துச்சமாக மதித்து அதனை எதிர்ப்போம்.

கே: ஜனநாயகமற்ற ஒரு ஆட்சியை எவ்வாறு எதிர்க்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

ப: அதை நாங்கள அண்மையில் செய்து காட்டினோம்

கே: வன்முறைகளின் ஊடாகவா?
ப: ஆம். எனினும் இது பகுதியளவில் உண்மை. பொது மக்களின் உணர்ச்சிகள் தூண்டப்படும் போது அவ்வுணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது, உள்நாடு மற்றும் சர்வதேச ரீதியாக இதை அவதானிக்கலாம். பின்லேடன் போன்ற அடிப்படை வாதிகள் இஸ்லாத்தை பரப்புவதற்காக இரத்தம் சிந்துகின்றனர். அதுதான் உண்மை.

நமது மக்களின் எதிர்பார்ப்புகளும் கனவுகளும் புத்த கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அவர்கள் அமைதியானவர்கள். தம்புள்ளை சம்பவத்தின் போது இந்த அமைதி ஒரு பக்கத்துக்கு தள்ளப்பட்டது. இதை நான் வன்முறையாக கருதவில்லை.

கே: புத்த மத கோட்பாடுகள் அமைதியை போதிக்கின்றன. எனினும் நீங்கள் இதற்கு எதிரான போக்குடைய புத்தர்களின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்குகிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?

ப: இல்லை, இந்த கருத்தை என்னால் ஏற்க முடியாது. அரசாங்கமே இவ்வாறான ஒரு காரியத்தை மேற்கொண்டது, முப்பது ஆண்டுகளின் முன்னால் விகாரை மற்றும் அதனை சூழ உள்ள பிரதேசத்தை பாதுகாக்க ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இதை அமுல்படுத்தாமல் அரசே மக்களை இவ்வாறான ஒரு நிலைக்கு தள்ளி விட்டது. இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

கே: ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் தம்புள்ளை வாசிகள் இல்லை என்றும் வெளியிடங்களில் இருந்து உங்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறதே?

ப: யார் அவ்வாறு சொல்கிறார்கள்? எவரும் எதையும் சொல்லலாம். இவ்வாறான கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு பண்டைய பழமொழி உள்ளது ஒன்று பசியுடன் இருக்கும்போது ஒரு சிறிய பல்லி கூட ஒரு உடும்பு ஆகிறது. எனவே யார் என்ன சொன்னாலும் அதை நான் பொறுப்பேற்கமாட்டேன்.

கே: கடந்த மாதம் 30 ஆம் திகதி உங்களை நான் தம்புள்ள விகாரையில் வைத்து சந்தித்தபோது, தம்புள்ளையில் பல மத மக்கள் புரிந்துணர்வுடன் வாழ்வதாக குரிப்பிட்டீர்கள், அதற்கு என்ன நடந்தது? ஏன் இவ்வளவு  விரைவாக இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன?

ப: விரைவாக ஒழுங்கு செயப்பட்டது என்று யார் சொன்னது? ஊடகங்கள்தான் அவ்வாறான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. நீண்டகாலமாக இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பொறுப்பான அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்ட சென்றிருந்தோம். ஆனால் அவர்கள் அமைதியாகவே இருந்து வந்துள்ளனர். வேலை புரிவோர் சம்பள உயர்வுக்காக ஒரு படிவத்தை பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ள முடியுமா? அவர்கள் போராடித்தான் அதை பெற்றுக்கொள்ள முடியும். இதுதான் நாட்டின் நிலை, நீங்கள் கூறும் நவீன ஜனநாயகம் இங்கு செல்லுபடியாகாது. உரிமைகள் வேண்டுமானால் போராட்டத்தின் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். இதுதான் உண்மை. இதை யாரும் பொய் என்று கூற முடியாது. இந்த நாட்டு மக்கள் உரிமைகளை வென்றெடுக்க போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். நாம் எல்லோரும் ஒரு துறை எழுதப்பட்ட ஒரு கடிதம் ஒப்புகை இல்லாமல் போகும் ஒரு நாட்டில் வாழ்கின்றோம். எனவே மக்கள் இவ்வாறன விடயத்தையே நாடவேண்டும்.

கே: இந்த ஆர்ப்பாட்டம் விரைவாக ஒழுங்கு செய்யப்படவில்லை, புத்த மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு, அரசு பொது மக்களை பொறுமை இழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது இவற்றுக்கு அரசே பொறுபேற்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மேலும் எவ்வாறு பின்லேடன் இஸ்லாத்தை பரப்ப வன்முறையை கையாண்டார் என்றும் கூறுகிறீர்கள். எனவே மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

ப: ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். அரசு பொறுப்பு கூற வேண்டும். எனினும் 20 ஆம் திகதி இரத்தம் சிந்தப்படவில்லை.

கே: ஆம், எனினும் 20 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் இம்முறை நாம் கைகளில் புத்த கொடிகளுடன் வந்துள்ளோம் எனினும் அடுத்த முறை இது வித்தியாசமாக இருக்கும்என்று வெளிப்படையாக கூறினீர்கள். எனவே அடுத்த முறை ஏதும் இரத்தம் சிந்தப்பட்டால் அதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா

ப: இதற்கான  பொறுப்பு செயல்திறனற்ற இந்த நாட்டின் ஆளும் வர்க்கத்தினரால்தான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் பள்ளிவாயல் பற்றிய தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். பிரதமர் இது சம்பந்தமான ஒரு முடிவை எடுத்துள்ளார் என்பதை அவர்கள் உணர வேண்டும். பிரதமர் இந்த நாட்டின் இரண்டாவது குடிமகன் என்பதையும் அவர் புத்த சாசன அமைச்சர் என்பதனையும் அவர்கள் உணர வேண்டும்.

பிரதமர் இப்பிரச்சினை சம்பந்தமான அரசின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளார். இந்த நிலைப்பாட்டை அரசுடன் இணைந்துள்ள யாரும் அவர்கள் தம்புல்லவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருப்பினும் எதிர்க்க முடியுமா?

அரசாங்க அமைச்சர் ஜானக தென்னகோன் பள்ளிவாயல் அகற்றப்படாது என்று கூறுகிறார். பிரதமர் அகற்றப்படும் என்று கூறுகிறார். அமைச்சர் ரவூப் ஹகீம் பள்ளிவாயல் அந்த இடத்திலேயே இருக்கும் என்று கூறுகிறார். இக்கருத்துக்கள் அரசு பிளவு பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் பிரதமரை விட பெரிய அமைச்சர்கள் அரசில் உள்ளனர் என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது. இந்த நிலை எவ்வாறு சாத்தியமாகும்? அரசுக்கும் மந்திரி சபைக்கும் உரிய கூட்டு பொறுப்புக்கு என்ன நிகழ்ந்துள்ளது? எனவே நாங்கள் இந்த ஒழுக்கமற்ற அரசியல் சூதாட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம்.

கே: அமைச்சரவையின் கூட்டு பொறுப்பு என்று கூறும்போது இலங்கை ஒரு பல்மத, பல்வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்ட பல்லின மக்கள் வாழும் நாடு என்பதை தங்களுக்கு நினைவூட்ட விருபுகிறேன்.

ப: என்ன முட்டாள்தன. நீநீங்கள் ஒரு முட்டாள்தனமான கோட்பாடு பற்றி பேசுகிறீர்கள். இந்த நாட்டில் 14 மில்லியன் பௌத்தர்கள் உள்ளனர். எத்தனை முஸ்லிம்கள் இங்கு வாழ்கின்றனர். உதாரணமாக தாய்லாந்திலும் மியன்மாரிலும் பெரும்பான்மையாக புத்த மக்கள் வாழ்கின்றனர். வத்திக்கானில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனவே நாங்கள் வத்திக்கானை ஒரு கத்தோலிக்க தேசம் என்று அழைக்கின்றோம். இதே போல் மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம்களின் பெரும்பான்மை உள்ளது. எனவே அவற்றை நாம் இஸ்லாமிய தேசங்கள் என்று அழைக்கின்றோம்.

கே: எனது கேள்வி தவறாக புரியப்பட்டுள்ளது. பல்வேறு  மதங்களை கொண்டுள்ள ஒரு சமூகத்தில் வாழும் வெவ்வேறு மக்கள் சமமான உரிமைகளை கொண்டிருக்க கூடாதா?

 
ப: நீங்கள் பவுத்தர்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறீர்களா? நாங்கள் எல்லாரையும் மதித்தோம். இது பவுத்த பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் அதை பறிக்க முயற்சிப்பவர்களை எதிர்த்தல் தொடர்பானது. அர்த்தமற்ற விடயங்களை இங்கு கதைப்பதற்கு எந்த தேவையுமில்லை. 2300 ஆண்டுகள் பழமையான எங்கள் புத்த மத பரம்பரை சொத்தை  பாதுகாக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம். அவர்கள் எங்களிடமிருந்து அதை பறித்தெடுக்க முயல்கின்றனர். ஒருவரின் சொத்துக்களை பாதுகாக்கவும் அதை பறிப்பவர்களுக்கு எதிராகவும் நான் எப்போதும் குரல் கொடுப்பேன்.

இஸ்லாமியவாதிகள் வேறு எதையோ இங்கு  முயற்சிக்கின்றனர். அதை அனுமதிக்க முடியாதது. நாங்கள் ஈராக்கிற்கோ மத்திய கிழக்குக்கோ சென்று அவர்களின் உரிமைகளை பறிக்க முயல்கின்றோமா? இங்கு நடப்பது கொள்ளை அடிப்பதற்கு சமமானது. நீங்கள் இந்த நிலையை முழு நாட்டிற்கும் எடுத்துரைக்க வேண்டும்.

கே: ஒருவரின் உரிமையை பாதுகாக்க நீங்கள் இன்னொருவரின் உரிமையை மீறுகின்றீர்கள்?

ப: நீங்கள் புத்த மக்களின் உரிமைகளை நசுக்க முயற்சிக்கிறீர்களா?

கே: அவர்கள் இந்த பள்ளிவாயல் 1962 ஆம் ஆண்டு தொட்டு இருந்து வருவதாக கூறுகிறார்களே?

ப: நான் மூன்றாவது கண் உள்ள மனிதன் போல உங்களிடம் பேசுகிறேன். சர்வதேச ரீதியாக நடப்பதை பற்றி நான் பேசுகிறேன். உலகளாவிய ரீதியில் இஸ்லாம் எழுச்சி பெற்று வருகின்றது. இதற்கு சில சிங்களவர்களும் உதவுகின்றனர். நீங்களும் இதை செய்ய வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

கே: அவ்வாறாயின் உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய அடிப்படை வாதம் வளர்வதை போன்று இங்கு பௌத்த அடிப்படைவாதம் வளர்வதாக நீங்கள் கூறுகிறீர்களா?

ப: அவ்வாறான ஒரு விடயம் இங்கு இல்லை. ஏனையோர் அவ்வாறான நோக்கங்களை கொண்டிருக்கலாம். எனக்கு இதை ஏற்கவோ அல்லது அத்தாட்சிப்படுத்தவோ முடியாது. நான் அவ்வாறானவன் இல்லை.

2300
வருடகால வரலாற்றை உடைய ரங்கிரி தம்புள்ள விகாரை மிகவும் புனிதமான விகாரை. UNESCO கூட இதை வரலாற்று சிறப்பு மிக்க இடமாக பெயரிட்டுள்ளது. புத்தர்கள் இதனை பாதுகாத்ததனால் இது சாத்தியமானது. இப்போது இஸ்லாமியர்கள் (தம்பிமார்) அதற்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கும் அவர்களுக்கு துணை போவோருக்கும் இது நல்ல விடயமாக இருக்கலாம். எனினும் நான் சொல்கிறேன் விகாரையை பாதுகாத்த பௌத்தர்களின் காரணமாகவே இதனை சுற்றியுள்ள கிராமங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பள்ளி அல்லது தேவாலயத்தினால் அல்ல.

எங்களுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. முஸ்லிம்களுக்கு தம்புள்ளவுடன் என்ன வரலாறு உள்ளது. அவர்களது பகுதிகளில் அவர்கள் எதுவும் செய்து கொள்ளட்டும். நான் இங்கு வரலாறு பற்றி பேச விரும்பவில்லை. எனினும் ஒரு பிக்குவாக நான் வரலாறு மற்றும் தொல்பொருளியலை கற்றுள்ளேன். இலங்கையின் வரலாறையும் நான் கற்றுள்ளேன்.

முஸ்லிம்கள் இலங்கைக்கு படகுகளில் சில்லறை வியாபாரத்துக்கு வந்தார்கள். ஆண்கள் மாத்திரமே வந்தனர். அவர்களில் சிலர் இலங்கை இந்தியா மற்றும் மாலை தீவு போன்ற நாடுகளில் குடியேறினர்.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க வின் காலத்தில் ஒரு சிறிய இடம் தாருங்கள் என்ற பழமொழி கூட உள்ளது. பயணிகள் போல வந்த அவர்கள் சிங்கள மற்றும் தமிழ் பெண்களை கொள்ளையிட்டனர். சிங்கள தமிழ் பெண்களை முட்டாள்களாக்கி ஏமாற்றி திருமணம் முடித்தனர். அவர்களில் முகங்களில் திரை இடுவது முகங்களை மறைப்பதற்காகவா? இது பெண்களை கொள்ளையிட முஸ்லிம் ஆண்கள் மேற்கொண்ட தந்திரமாகும். அது இப்போது மத அனுஷ்டானமாக மாறியுள்ளது. எனினும் இது உண்மையான மார்க்க அனுஷ்டானம் கிடையாது. பெண்களை கொள்ளை அடிப்பதற்கான தந்திரமே ஆகும். இதை பற்றி என்னால் சொல்லக்கூடியது  இவ்வளவே.

 கே: உலகமயமாதல் கொள்கையை நம்பும் உங்களால் தூய இனக்கொள்கையை ஏற்க முடியுமா?

ப: நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. நான் உலகமயமாதலை ஏற்றுகொள்கிறேன். அதேபோல் கலப்பில்லாத தூய சிங்கள இனம் உண்டு என்பதையும் நான் திடமாக நம்புகிறேன். தூய இன கொள்கையை மறுக்கும் உங்களைப்போன்றவர்கள் கலப்பு இரத்தம் ஓடுகிறவர்கள். எங்கோ ஒரு கலப்பு இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்களின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் தம்பி முதியான்சலாகேஎன்று அவர்களின் பெயர் பதியப்பட வேண்டும்.

கே: புத்த போதனைகள் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டவை. எனினும் இலங்கையில் புத்த மத குருமார்கள் பல பிரிவுகளாக உள்ளனர். இவ்வாறன வர்க்க வேறுபாட்டு கொள்கையில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

ப: இவ்வாறான பிரிவுகளுக்கான தேவைப்பாட்டை நான் மறுக்கின்றேன். எனினும் கவுதம புத்தரின் காலத்தில் கூட பல்வேறுபட்ட குழுக்களாக பிக்குகள் இருந்தனர். புத்தரின் முதலாவது உபந்நியாசத்தில் புன்னா என்ற பிக்கு கலந்து கொள்ளவில்லை. இதில் கலந்து கொண்ட ஏனைய பிக்குகள் புன்னா இந்த உபந்நியாசத்தை ஏற்க வேண்டுமென்று கருதினர். இதற்கு பதிலளித்த புன்னா நான் ஏற்கனவே அதை செவியுற்றுள்ளேன் இதை நான் ஏற்கிறேன் நீங்களும் ஏற்கிறீர்கள்என்று கூறினார். மூன்று மாதங்களின் பின்னர் புத்தர் பரிநிர்வாண நிலையை அடைந்தார். மாறுபட்ட அபிப்பிராயங்கள் உடைய குழுக்கள் அக்கால கட்டம் தொட்டு இன்றுவரை இருக்கின்றன.

கே: இலங்கையில் உள்ள புத்த மதப்பிரிவுகள் சாதிகளை அடிப்படையாக கொண்டவை. புத்தரின் போதனைகளில் சாதிப்பாகுபாடு உள்ளதா?
ப: அதை நான் உறுதி செய்ய முடியாது. எனினும் பிரிவுகள் சாதிகளை அடிப்படையாக கொண்டவை என்ற கூற்றை என்னால் ஏற்க முடியாது.

கே: நீங்கள் சியாம் பிரிவை சேர்ந்தவர். நீங்கள் ரங்கிரி தம்புள்ள பிரிவு என்ற இன்னொரு வகுப்பை உருவாக்கியுள்ளீர்கள் எந்த அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது?

ப: உண்மையை சொல்வதானால் நான் பேசும் கொள்கைகளையே நான் பின்பற்றுகிறேன். பிறப்பில் இருந்து புத்தர் சாதி பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை பின்பற்றும் நாங்களும் சாதி முறையை நிராகரிக்கிறோம். அதே வேளை எந்த குழு அங்கத்தவர்களும் எந்த பின்புலத்தில் இருந்தும் எங்களுடன் இணைய முடியும்.

கே: 23 ஆம் திகதி ரங்கிரி தம்புள்ள விகாரையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அஸ்கிரிய மகா நாயக்கர் கலந்து கொண்டார் அவரும் சியாம் பிரிவை சேர்ந்தவரல்லவா?

ப: ஆம், அவர் எங்களின் பிரதான மத குரு. எனினும் ஏனைய பிக்குகளும் அதில் கலந்து கொண்டனர்.

கே: உங்களுக்கும் அமைச்சர் ஜானக தென்னக்கோனுக்குமிடையில் என்ன பிரச்சினை?
ப: அவர் 1993 அல்லது 1994 ல் முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினரானார். அதன் முன்பு அவர் ஒரு போலீஸ்காரராக இருந்தார். அவரின் தந்தை ஒரு சிறந்த பவுத்தராக இருந்தார். ஜானக பெற்ற வாக்குகள் அவரின் தந்தையின் நன் மதிப்பு காரணமாகவே அவருக்கு கிட்டியது. தேர்தல் மேடைகளில் தனது தந்தை மரணப்படுக்கையில் போலீஸ்காரனாக எதையும் சாதிக்க முடியாது தம்புள்ளைக்கு சென்று நான் விட்ட இடத்தில் இருந்து பணியை தொடங்கு என்று கூறியதாக கண்ணீர் மல்க பிரச்சாரம் செய்தார். இதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினரானவுடன் அவர் செய்த முதல் காரியம் ஒரு சாராயக்கடையை திறந்ததுதான். இதற்கு பொது மக்கள் கடைகளை மூடி எதிர்ப்பு தெரிவித்தனர். கொடிகளை பிடித்து ஊர்வலம் சென்றனர். குண்டர்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினார். குண்டர்கள் பவுத்த கொடியை இழுத்தெறிந்து மக்களை நசுக்கினார்கள். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் அவரும் போலீஸ்காரனாக இருந்தமையால்.

நான் இதை அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகாவிடம் முறையிட்டேன். அவர் சாராயக்கடையை உடனடியாக மூடிவிட்டார். அதிலிருந்து எங்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் ஆரம்பமாகின. இப்போது நான் அவரை விட மேலே சென்று விட்டதால் அவர் என்னுடன் கோபமாக உள்ளார்.

கே: எனவே நீங்களும் அவருடன் கோபமாக உள்ளீர்களா?

ப: அவருடன் நான் என்ன கோபம் கொள்ள முடியும்? எனக்கு விருப்பு வாக்கு இருப்பின் நான் கோபம் கொள்ள முடியும். அவருடன் என்றும் நான் நண்பராக இருந்ததில்லை. அவரை பற்றி நான் சந்திரிகாவிடம் முறையிட முன் அவருடன் போனில் பேசினேன். அவரிடம் நான் கேட்டேன், “நீங்கள் உங்கள் பிரசாரத்தில் உங்களின் தந்தை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளீர்கள். இவ்விடத்தில் தானா உங்களின் நிறுத்தி இருந்தார்என கேட்டேன்.

அதற்கு அவர் நான் மக்களின் விருப்பத்தையே நிறைவேற்றுகின்றேன் என்று கூறினார். அதற்கு நான் இப்போது தம்புள்ள தன்னிறைவு அடைந்து விட்டது ஒரு சாராய கடை மாத்திரம்தான் தேவையாக  உள்ளதா என கேட்டேன். அவர் கோபத்துடன் தொலைபேசியை துண்டித்தார். அதிலிருந்து புத்த மத விழுமியங்களை பாதுகாக்க நான் வேளை செய்தேன். அவர் கோபமடைந்தார். என்னை பழி வாங்க முயற்சித்தார். அது கனவிலும் நடக்கவில்லை.

கே: தம்புள்ள மக்கள் நீங்கள் விகாரைக்கு சொந்தமான நிலத்தை ரூபாய் ஒரு இலட்சம் பெற்றுக்கொண்டு கொடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?

ப: இந்த பணம் நான் எடுப்பது அல்ல. இந்த நிலங்கள் தம்புள்ள ரங்கிரி விகாரைக்கு சொந்தமானது. இவ்விகாரை விகாரைகள் சட்ட மூலத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. பவுத்த ஆணையாளர் நிலங்களை பகிர்ந்தளிக்க ஒரு வரைமுறையை கொண்டுள்ளார். இதன்படி பதிவுகளுக்காக ஒரு குறித்த தொகை அறவிடப்படுகிறது. இந்த நிலங்கள் யாருக்கும் விற்கப்பட முடியாதவை. நிலங்களை பெறுபவர் அவற்றின் தேவை இல்லாத சந்தப்பத்தில் நிலங்களை விகாரைக்கு மீளளிக்க வேண்டும்.

இதை மக்கள் பின்பற்றுவதில்லை மற்றவர்களுக்கு இதை விற்கிறார்கள். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாங்கள் கட்டணங்கள் அறவிடுகிறோம். விற்பனையில் 30 வீதம் விகாரைக்கு செலுத்தப்பட வேண்டும். இதற்கு நாங்கள் ரசீதுகள் வழங்குகின்றோம். இது அரச கணக்காய்வுக்கு உட்படுகின்றது. தம்புள்ள விகாரைக்கு இவ்வாறான குற்றச்சாட்டை ஊடகவியலாளர் என்ற ரீதியில் வைக்கும் உங்களால் தலதா மாளிகைக்கு இவ்வாறான குற்றச்சாட்டை வைக்க முடியுமா?

கே: அவ்வாறெனின் விகாரைகள் சட்டமூலம் புனிதமானது இல்லையா? அவ்வாறெனில் மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு ஏன் அதனை மாற்ற முடியாது?

ப: இது ஒரு சட்ட மூலம். எல்லா சட்ட மூலங்களும் மக்களின் பொருத்தப்பாட்டுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டு என்று கூறுகிறீர்களா? இந்த சட்ட மூலம் விகாரை நிலங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டதாகும்.

கே: சனத்தொகை நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. ஆனால் நிலங்கள் அவ்வாறில்லை. இந்த மக்களுக்கு நிலத்துக்கான உரிமை இருக்க கூடாதா?

ப: நீங்கள் அடிப்படை மனித தேவைகளின் அடிப்படையில் பேசுகிறீர்கள். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அரசு என்று சொல்லும்போது அது மக்களையே குறிக்கின்றது. அவ்வாறெனில் சாதாரண பொதுமக்கள் வலுக்கட்டாயமாக அரச நிலத்தினுள் நுழைய முடியுமா? தயவு செய்து பதில் கூறுங்கள்.

கே: நீங்கள் கேட்பதால் நான் கூறுகிறேன். அரசாங்கம் என்ற கருப்பொருள் மக்களை குறிப்பதாக கூறுவதை என்னால் ஏற்க முடியாது. இரண்டும் வேறு வேறானவை. அரசாங்கம் இவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. துரதிஷ்டவசமாக மக்களும் இதை நம்புகிறார்கள்.

ப: நீங்கள் மிகச்சரியாக கூறினீர்கள். அவ்வாறெனில் மக்கள் அரச நிலங்களுக்குள் நுழைய முடியுமா? அவர்களால் முடியாது.

கே: இது மாற்றப்பட முடியாததா?

ப: இது நவீன மனித உரிமை மற்றும் நவீன ஜனநாயகம் என்று அழைக்கப்படும். யதார்த்தத்தில் இவ்வாறான ஒரு நிலை இல்லை.

கே: நீங்கள் முன்னர் கூறினீர்கள் இந்த ஆற்பாட்டங்கள் மக்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டவை என்று. அவ்வாறெனில் நீங்கள் பவுத்தர்களின் சகிப்புத்தன்மையை அகற்றி அவர்களை தூண்டுகிறீர்களா?

ப: நான் இதை மறுக்கிறேன்.

கே: நீங்கள் ஒரு மேலாதிக்க சிந்தனை கொண்ட ஒரு மனிதரா?

ப: ஆம். நான் அவ்வாறுதான். வெட்கத்துடன் நான் இதை ஏற்கிறேன். நான் அவ்வாறு இல்லாவிட்டால் இந்த விகாரைகள் முன்னேற்றமடைய முடியாது.

கே: சாதாரண மக்களுக்கும் மத குருக்களுக்கும் இடையான ஒரு முக்கிய வேறுபாடு மக்களுக்கு இடையான கருத்து வேறுபாடுகள் சண்டைகளில் முடிகின்றன. இங்கு மத குருக்கள் ஒரு நடு நிலையாக இருந்து இந்த சண்டைகளை தீர்க்க முயற்சிப்பர். ஒரு முன்னணி மதகுருவாக நீங்கள் இருந்தும் நான் மேலாதிக்க சிந்தனை கொண்டவன் என்று கூறுகிறீர்கள். இவ்வாறான நீங்கள் எவ்வாறு சாதாரண மக்களுக்கு இடையில் எழும் பிணக்குகளை தீர்க்க முடியும்?

ப: நீங்கள் மேலாதிக்க வாதியை எவ்வாறு விபரிக்கிண்றீர்கள் என்று எனக்கு தெரியாது. என்னைப்பொருத்த வரை ஒரு படைக்கு ஒரு தளபதியே இருக்க வேண்டும். எல்லாரும் கட்டளைகள் பிறப்பித்தால் எவ்வாறு ஒரு போரில் ஈடுபடுவது. அதே போல் ஒரு நாடு எல்லாருக்கும் அடிபணியும் ஒரு தலைவரை கொண்டிருக்க முடியாது.

கே: நான் ஒரு மேலாதிக்க தன்மையை எல்லோரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் ஒரு குணாதிசயம் என்று விபரிப்பேன்.

ப: அதை பற்றி நான் கவனத்தில் கொள்ள மாட்டேன். ஒரு விடயத்தை நினைவு வைத்துக்கொள்ளுங்கள் நானும் ஊடகம் சார்ந்த ஒருவன்தான். எனக்கும் ஒரு ஊடக அமைப்பு உண்டு. எனக்கு ஊடகத்தை பற்றி மிக நன்றாக தெரியும். ஒரு ஊடகவாதி என்ற முறையில் நீங்கள் கேள்வி கேட்கும்போது நானும் ஊடகவாதி என்ற முறையிலேயே பதிலளிப்பேன். ஊடக வாதி என்ற வகையில் உங்களுக்கும் வரையறைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கே: எனினும் நான் இனாமளுவா சுமங்கள பிரதான மத குருவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களிடம் அவசியமான கேள்விகள் என்று நான் கருதுபவற்றையே நான் கேட்டேன். உங்களிடம் பேசிய பிறகு உங்களுக்கும் சாதாரண பாமரனக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை என்றே நான் கருதுகிறேன்.

ப: நீங்கள் உங்களது உளவியல் ஆளுமைக்க ஏற்ப முடிவு எடுக்கலாம். பாமரனுக்கும் மத குருவுக்கும் இடையான வேறுபாடு பற்றி எனக்கு கற்பிக்க தேவை இல்லை. நீங்கள் கூறியவை ஒரு மனிதன் எனக்கு ஏற்படுத்தக்கூடிய அவமானத்தின் எல்லை. அதீத புத்திசாலியாக இருக்க முயற்சிக்க வேண்டாம். நீ வேண்டுமானால் இதை ஒலிப்பதிவு செய். எனது நேரத்தை வீணாக்காதே.

தமிழில் காத்தான்குடி தகவல்

No comments:

Post a Comment